Description |
மூன்று தொகுதிகளாக வெளியிடப்படும் புதிய தமிழ் இலக்கிய வரலாறு, இதுவரை தமிழில் வெளிவந்துள்ள அனைத்து இலக்கிய வரலாற்று நூல்களினின்றும் வேறுபட்டது. பண்டைக் காலம், இடைக்காலம், இக்காலம் என்று மூன்று காலங்களுக்கும் தனித் தனித் தொகுதிகள் கொண்டது. அவ்வக்கால மொழியின் வளர்ச்சி. சமூக அரசியல் பின்புலம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு தனித் தனிக் கட்டுரையும் வெவ்வேறு அறிஞர்களால் எழுதப்பட்டுள்ளது இந்நூலின் தனிச்சிறப்பு. மலேசியா, ஈழம் ஆகிய நாடுகளின் இலக்கிய வரலாறும் இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளது. அறிஞர் பெருமக்களுக்கும் மாணவர்களுக்கும் பெரும் பயன் நல்கும் தகவல் களஞ்சியம் புதிய தமிழ் இலக்கிய வரலாறு. தொகுப்பாசிரியர்களாகவும், முதன்மைப் பதிப்பாசிரியர்களாகவும் விளங்குபவர்கள் பேராசிரியர் சிற்பி பாலசுப்பிரமணியம், எழுத்தாளரும் அறிஞருமான நீல பத்மநாபன் இருவரும் ஆவர். நீல பத்மநாபன் சாகித்திய அகாதெமி தமிழ் ஆலோசனைக் குழு ஒருங்கிணைப்பாளராக இருந்த காலத்தில் (1998-2002) இத்தொகுதிகள் திட்டமிடப்பட்டன. சிற்பி பாலசுப்பிரமணியம் தமிழ் ஆலோசனைக் குழு ஒருங்கிணைப்பாளராக விளங்கிய காலத்தில் (2008-2012) இப்பணி நிறைவு பெற்றது. நாவல், சிறுகதைப் படைப்பாளியான நீல பத்மநாபன், சாகித்திய அகாதெமி விருதும் மொழிபெயர்ப்புப் பரிசும் பெற்றவர். கவிஞரான சிற்பி பாலசுப்பிரமணியம் கவிதை, மொழிபெயர்ப்பு ஆகிய இரு துறைகளில் சாகித்திய அகாதெமி விருதுகள் பெற்றவர். |