1 / 3
The Woods

ஷோலே: நீறு பூத்த நெருப்பு

Author ஜியா
Publisher Horsesense
category கட்டுரை
Edition 1st
Format paperback

₹171

₹180

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

ஒரு மனிதன்... ஒரு படம்... ஒரு பாடம்... காரணம் ஜியா. அதனாலேயே இந்தப் புத்தகம் பத்தோடு பதினொன்று இல்லை என உறுதியாக சொல்ல முடிகிறது. நூலை படித்து முடித்தப் பிறகு நீங்களும் இதை ஒப்புக் கொள்வீர்கள். ஆமாம். ‘ஷோலே’ திரைப்படம் குறித்த புத்தகம்தான் இது. ‘ஷோலே’ படம் சார்ந்து உங்களுக்கு என்னவெல்லாம் தெரியுமோ... எது குறித்து எல்லாம் உங்கள் சகாக்களிடம் மணிக்கணக்காக உரையாடினீர்களோ... எந்தெந்த காட்சிகள் / வசனங்கள் / உடல்மொழிகள் குறித்தெல்லாம் சிலாகித்து நேரம் போவது தெரியாமல் பேசினீர்களோ... அவை எல்லாம் இந்தப் புத்தகத்தில் இருக்கின்றன. ஆனால், அவை மட்டுமே இந்நூலில் இடம்பெறவில்லை என்பதுதான் இப்புத்தகத்தை தனித்து காட்டுகிறது. அதனாலேயே இந்நூலுக்கு தனிச்சிறப்பு இருக்கிறது என்பதை துணிந்து சொல்ல முடிகிறது. காரணம் ஜியா. என் சகா. ஒரே நிறுவனத்தில் இருவரும் 15 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிகிறோம். எந்தவொரு நிறுவனத்திலும் ஒன்றாகப் பணிபுரியும் இருவர், முதல் ஐந்து ஆண்டுகள் வரைதான் சக ஊழியர்களாக இருப்பார்கள். அதன்பிறகு இருவரும் மெல்ல மெல்ல சகோதரர்களாக பிணைந்து விடுவார்கள். இந்த உண்மையை சொன்னது யார் என்றுத் தெரியாது. ஆனால், சொன்ன கருத்து மட்டும் கல்வெட்டாக மனதில் பதிந்திருக்கிறது. ஒருவேளை இந்த வாக்கியத்தின் உதாரண புருஷர்களாக நாங்கள் இருவரும் இருப்பது இதற்குக் காரணமாக இருக்குமா? இருக்கும். இல்லையெனில் எனது இளைய சகோதரராக அவரும்; அவரது மூத்த சகோதரராக நானும் மலர்ந்திருப்போமா? தமிழ், ஆங்கிலம், இந்தி, உருது... என பல மொழிகள் ஜியாவுக்குத் தெரியும். மொழி சார்ந்த சந்தேகங்களை யார் எப்பொழுது கேட்டாலும் உச்சரிப்பும் அர்த்தமும் மாறாமல் விளக்குவார்; திருத்துவார்; புரிய வைப்பார். அத்துடன் தன் பணி முடிந்தது என விலகிவிடுவார். ஒருபோதும் மற்றவர் எழுதிய ஆக்கங்களுக்கு சொந்தம் கொண்டாட மாட்டார். ‘இது இவர் எழுதியது...’ என்றே உரியவருக்கான கிரெடிட்டை உரியவர்களிடம் தெரிவிப்பார். அதேநேரம் தனது ஆக்கங்களை ஒருபோதும் ‘என்னுடையது’ என சொந்தம் கொண்டாட மாட்டார். இதுவொரு கூட்டு செயல்பாடு என்றே தன் எழுத்தை வரையறுப்பார்; முதன்மைப்படுத்துவார்; முன்னிலைப்படுத்துவார். எழுத்து சார்ந்து தனக்கு எந்தவொரு பாராட்டு கிடைத்தாலும் அதை உடனிருப்பவர்களுக்கு சமர்பித்து விடுவார். இதுதான் ஜியா. இதுதான் அவரது ஆளுமை. இதுவேதான் இப்புத்தகத்தின் மையமும். மிகைப்படுத்தவில்லை. உலகில் காலந்தோறும் நடைபெறும் ஒவ்வொரு சம்பவமும் முந்தைய நிகழ்வின் தொடர்ச்சிதான்; அடுத்த சம்பவத்தின் ஆரம்பம்தான். நிகழ்வுக்கும் சம்பவத்துக்கும் சாட்சியாக விளங்கும் அனைத்து புறப்பொருட்களும், அச்சூழலைச் சேர்ந்த ஒவ்வொருவருடைய அகத்திலும் தாக்கம் செலுத்துகிறது; நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ அதனுடன் வினைபுரிய வைக்கிறது. மொத்தத்தில் அஃறிணையும் உயிரிணையும் கலந்த கூட்டு செயல்பாடுதான் சம்பந்தப்பட்ட நிகழ்வாகவும் சம்பவமாகவும் வரலாற்றில் பதிவாகிறது. மனித சமூக சாரம் என சரித்திரம் குறிப்பிடுவது இதைத்தான். இந்த உண்மையைத்தான் இந்த ‘ஷோலே’ புத்தகமும் உரக்கச் சொல்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற இடங்கள் முதல் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்ப உபகரணங்கள் வரை அனைத்தையும் ஜியா இப்புத்தகத்தில் பட்டியலிட்டிருக்கிறார். வெறும் பெயர்களாக இல்லாமல் அவை ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தையும், அந்த தாக்கமே ‘Cult Movie’ அந்தஸ்தை ‘ஷோலே’வுக்கு கொடுத்திருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார். ஓரளவு பிரபலமான துணை நடிகர். வசனங்களை பேசி நடிக்கக் கூடியவர். அப்படிப்பட்டவரின் கதாபாத்திரம் நீளம் கருதி கடைசி நேரத்தில் எடிட்டிங்கில் வெட்டி எறியப்பட்டது. இதனால் மனவருத்தத்துக்கு ஆளான அந்த துணை நடிகர், என்ன செய்தார்? அவரது திரைவாழ்வு என்ன ஆனது? என்பதை தனக்கே உரிய எமோஷன் பாணியில் பதிவு செய்திருக்கிறார் ஜியா. இது ஒரு சோறு பதம்தான். இப்படி பானை சோறு பதங்கள் இப்புத்தகம் முழுக்க நிரம்பி வழிகின்றன. ‘ஷோலே’வின் ஒவ்வொரு ஃப்ரேமும் யாரையெல்லாம் எப்படியெல்லாம் மாற்றியிருக்கிறது என்பதை அகழ்வாராய்ச்சி செய்து கண்டுபிடித்திருக்கிறார். ஜூனியர் ஆர்டிஸ்ட் லெவலில் இருந்த ஒரு நடிகரை எப்படி கதாசிரியர்கள் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்த்தினார்கள்... எந்த சம்பவம் அந்த ஜூனியர் ஆர்டிஸ்டின் மீது கதாசிரியர்களுக்கு அன்பை / நம்பிக்கையை ஏற்படுத்தியது... கமர்ஷியல் / ஆர்ட் ஃபிலிமுக்கான பாலமாக எப்படி ‘ஷோலே’ உருவானது... தரம்ஜியை ஏன் ரசிகர்கள் கொண்டாடினார்கள்... சிக்கனமாக லோ பட்ஜெட் படங்களைத் தயாரிக்கும் ஒரு நிறுவனம் எதனால் இந்த ஹை பட்ஜெட் படத்தை விநியோகிக்க முன்வந்தது... படம் வெளியான சமயத்தில் மீடியா எப்படி ‘ஷோலே’வை அணுகியது... படம் ரிலீசான மூன்றாவது நாள் ரீ ஷூட் செய்ய ஏன் இயக்குநர் முடிவெடுத்தார்... அந்த ரீ ஷூட்டை யார் ஏன் தடுத்து நிறுத்தினார்கள்... 204 நிமிடங்கள் ஓடக் கூடிய ஒரு படம் எதனால் 35MM ஸ்கீரினில் ஒரு கால அளவிலும் 70MM ஸ்கீரினில் வேறொரு கால அளவிலும் திரையிடப்பட்டது... எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட 55வது நாள் வெளியான இந்தப் படத்தை மக்கள் எப்படி எதிர்கொண்டார்கள்... சென்சாரில் இப்படம் என்னென்ன பிரச்னைகளை சந்தித்தது... சகலமும் அனைத்தும் இப்புத்தகத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது. அதுவும் புனைவு கலக்காமல். காரணம் ஜியா. அவர் சினிமா பத்திரிகையாளர் என்பது அனைவருக்கும் தெரியும். விலை போகாதவர் என்பதை உடன் பணிபுரிபவர்கள் மட்டுமே அறிவார்கள். ஒருபோதும் திரையுலக நட்சத்திரங்கள் குறித்து உண்மைக்கு மாறான செய்திகளை எழுத மாட்டார்; எக்காரணத்தை கொண்டும் தேவைக்கு மீறி அவர்களை புகழமாட்டார்; அவர்கள் உச்சரிக்காத ஒரு சொல்லையும் சொன்னதாக குறிப்பிட மாட்டார். நிஜம் என்னவோ அதை மட்டுமே சத்தியத்துக்கு கட்டுப்பட்டு எழுதுவார். இந்நூலையும் அப்படித்தான் படைத்திருக்கிறார். ‘வாரே வாவ்...’ என்ற தொனி ஓர் இடத்திலும் வெளிப்படவில்லை. நடிகர்கள் குறித்தோ டெக்னீஷியன்கள் பற்றியோ ‘இந்திரன் சந்திரன்’ என்ற புகழ்ச்சி இல்லவே இல்லை. மாறாக எது நடந்ததோ... எது உண்மையோ... அதை அப்படியே எவ்வித பாசாங்கும், பூசிமெழுகலும் இல்லாமல் பதிவு செய்திருக்கிறார். இந்த உண்மையை கண்டறிய ஆண்டுக்கணக்கில் உழைத்திருக்கிறார். ‘ஷோலே’ வெளியான காலத்தில் வந்த அனைத்து பத்திரிகை செய்திகளையும் தேடித் தேடி சேகரித்திருக்கிறார்; படித்திருக்கிறார். முழுநீள பேட்டியை மட்டுமல்ல... சின்னதாக வந்த படம் குறித்த துணுக்கையும் அவர் அலட்சியப்படுத்தவில்லை. அதனாலேயே இயக்குநருக்கும் கதாசிரியர்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் கொடுத்த முக்கியத்துவத்தை கடை நிலை ஊழியர்களாக கருதப்படும் செட் அசிஸ்டெண்ட்டுக்கும் கொடுத்திருக்கிறார்; படம் உருவான / படம் எடுக்கப்பட்ட / படம் வெளியான காலகட்டத்தையும் உள்வாங்கி புறச்சூழலும் அகசூழலும் எப்படி தண்டவாளம் போல் பயணித்தது என்பதை புரிய வைத்திருக்கிறார். ஆம். இவர்கள் அனைவரும் / இவை அனைத்தும் கரம் கோர்த்து உருவா(க்)கியதால்தான் ‘ஷோலே’ இந்திய சினிமாவின் தவிர்க்க இயலாத இடத்தில் அமர்ந்திருக்கிறது என்பதை அழுத்தம்திருத்தமாக இப்புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். பலமொழி திரைப்படங்களின் தாக்கத்தை ‘ஷோலே’வில் காணலாம். ஜியாவும் எந்தெந்த படங்களின் தாக்கம் ‘ஷோலே’வின் எந்தெந்த காட்சிகளில் எதிரொலிக்கிறது என்பதை துல்லியமாகவே சுட்டிக் காட்டுகிறார். அதேநேரம் அந்த தாக்கம், எப்படி உருமாறி புதியதாக உருவாகியிருக்கிறது என்பதையும் வெளிச்சமிட்டு காண்பித்திருக்கிறார். அதனாலேயே ‘ஷோலே’ படம் குறித்த தனித்த நூலாக இப்புத்தகம் கம்பீரமாக தலைநிமிர்ந்து நிற்கிறது. ஜியா தொடர்ந்து புத்தகங்களை எழுத வேண்டும். எழுதுவார். எழுத வைப்போம். மனமார்ந்த வாழ்த்துகள் ஜியா... Keep Rocking... Keep on Walking... தோழமையுடன் கே.என்.சிவராமன்

Related Books


5% off ஆயன்book Add to Cart

ஆயன்

₹569.05₹599