1 / 3
The Woods

சாதுவான பாரம்பரியம்

Description

சீலன்பா, தாவர அறிவியலில் பெற்றிருந்த கல்விப் பயிற்சி, கிராமத்து மக்களையும் நிலத்துடன் அவர்கள் கொண்டிருந்த ஆழமான பிணைப்பையும் எழுத்தில் செழுமைப்படுத்த அவருக்கு உதவிற்று. 1860களின் ஃபின்லாந்தின் மிகப்பெரும் பஞ்சத்திலிருந்து தொடங்கும் நாவல், யூகா தொய்வோலா என்னும் ஏழைக் குத்தகைப் பண்ணை விவசாயியின் வாழ்க்கை வரலாற்றை ஃபின்லாந்தின் உள்நாட்டுப் போர் நிகழ்ந்த காலகட்டம்வரை (1917) பின்தொடர்கிறது. விவசாயம் செய்யும் அமைதியான குடியானவ மக்கள் ஆயுதமேந்திக் கிளர்ச்சியில் ஏன் ஈடுபட்டனர் என்பதை வாசகனிடம் சேர்ப்பிக்க விழைகிறார் ஆசிரியர். செஞ்சிவப்பு அணியின் சதியில் சிக்கிக்கொள்ளும் யூகா, செய்யாத கொலைக்காக மரண தண்டனைக்கு ஆளாகிறான். அவன் விதியை அடங்கிய தொனியிலும் ஆனால் பெரும் மனிதக் கருணையுடனும் பதிவுசெய்கிறார் சீலன்பா. நாவலின் கருப்பொருள் நிலம். நாவல் முழுக்க நிலக்காட்சியாய் வியாபித்திருப்பது வட ஃபின்லாந்துச் சூழல்தான். அடிப்படைகளை மட்டுமே முன்னிலைப்படுத்தி மிகச் சுருக்கமாக கதை சொல்லிய அதிசயம் நாவலில் சாத்தியமாகியுள்ளது. அவலம், பரிவு, மென்மை என மனித உணர்வுகளை ஆழ்ந்த புரிதலுடன் நாவல் பேசுகிறது. நாவலின் உரைநடை கவிதையாய் உயர்கிறது. ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா (1888-1964) ஃபின்லாந்தின் மிகச் சிறந்த இலக்கிய ஆளுமைகளில் ஒருவராகக் கருதப்படும் ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா எளிமையான பெற்றோருக்கு மகனாக இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் 1888இல் பிறந்தார். ஃபின்னியக் குடியானவனின் தாளமுடியாத வறுமையைச் சிறுவயதி லேயே அறிந்த சீலன்பா அதனைச் ‘சாதுவான பாரம்பரியம்’ என்ற தனது நாவலில் அழுத்தமாகச் சித்திரித்துள்ளார். இலக்கணப் பள்ளிக்கூடக் கல்விக்குப் பிறகு ஹெப்ரின்கி பல்கலைக்கழகத்தில் சென்று இயற்கை அறிவியல் கற்றார். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ஊரான ஹமீயுக்கிரொ-விற்குத் திரும்பியபின் எழுதத் தொடங்கினார். தனது முதல் நாவல் வெளியிடப்பட்ட 1916இலிருந்து நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் எனத் தொடர்ந்து எழுதினார். ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சீலன்பாவின் ஆக்கங்களில் ‘சாதுவான பாரம்பரியம்’ இரண்டாவதாகும். முதல் நாவல் ‘இளமையி லிருக்கும்போது தூங்கியவள்’. ‘ஃபின்லாந்துக் குடியானவர்கள் பற்றிய ஆழமான புரிதலுக்காகவும், அவர்கள் வாழ்வை, இயற்கையுடனான அவர்களின் உறவை நேர்த்தியான கலையாக வெளிப்படுத்தியமைக்காகவும்’ 1939இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஃப்ரான்ஸ் எமில் சீலன்பாவுக்கு வழங்கப்பட்டது. தனது 75ஆம் வயதில் 1964ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

Related Books


5% off அஞர்book Add to Cart

அஞர்

₹150
5% off மாகே கஃபேbook Add to Cart

மாகே கஃபே

₹261.25₹275
5% off கொடிவழிbook Add to Cart

கொடிவழி

₹379.05₹399
5% off THE POISONED DREAMbook Add to Cart

THE POISONED DREAM

₹379.05₹399