Description |
நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்து ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. 2014 மே மாதத்தில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியது, அல்லது அப்படிக் கூறப்பட்டதா? உள்ளபடியாக, நெருக்கடியைத்தான் இந்தியா எதிர்கொண்டுள்ளது. நம்முடைய ஆட்சியமைப்பு, சமூகம், பொருளாதாரம் என அனைத்தும் நொறுங்கிப்போய்விட்டன. அதற்கான அறிகுறிகளெல்லாம் நம்மைச் சுற்றியே இருக்கின்றன. 24/7 வேலைபார்த்துவந்த டிஜிட்டல் ராணுவமும் சமரசத்துக்கு ஆட்பட்ட ஊடகங்களும் ஆளுங்கட்சிக்கு ஆதரவான கூச்சல்களால் பொதுத் தளங்களை மூழ்கடித்துக்கொண்டிருந்த வேளையில், துணிவுமிக்க விமர்சனக் குரலால் அதிகாரத்திடம் உண்மையைப் பேசும் உறுதியோடு இருந்தார் பரக்கலா பிரபாகர். 2020 முதல் 2023 வரை ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக எழுதிவந்த இந்தக் கட்டுரைகளில், அவர் உண்மைகளையும் தரவுகளையும் உன்னிப்பாகக் கவனித்து, நிகழ்வுகளையும் பொது அறிக்கைகளையும் பகுப்பாய்வு செய்து, நம்முடைய ஜனநாயகம், சமூக நல்லிணக்கம், பொருளாதாரம் ஆகியவற்றின் எதிர்காலம் குறித்து அவர் ஏன் அச்சப்படுகிறார் என்பதை எடுத்துவைக்கிறார். 2014 முதல் 2022 வரை பிரதமர் ஆற்றிய சுதந்திர தின உரைகளில், ஆர்எஸ்எஸ் தலைவர்கள் ஆற்றிய உரைகளில்; வேலையின்மை மற்றும் சமத்துவமின்மை தொடர்பான புள்ளிவிவரங்களை அரசாங்கம் மறைத்துவைப்பதில்; புலனாய்வு அமைப்புகளும் வருமான வரித் துறையும் ஏற்றுக்கொண்ட பாரபட்சமான பாத்திரங்களில்; புதிய பாஜகவின் திரஸ்கார் அல்லது குடிமக்கள், வாக்காளர்கள் என்று இந்திய முஸ்லிம்களைத் தெளிவாக நிராகரிப்பதில்; கோவிட் பெருந்தொற்றைத் தவறான முறையில் கையாண்டதில் — இவற்றிலும் இவை போன்ற பலவற்றிலும் காணப்படும் மதப் பெரும்பான்மைவாதம், பதுங்கியிருக்கும் சர்வாதிகாரம், தவறான பொருளாதார நிர்வாகம் ஆகியவற்றை பரகால பிரபாகர் தெளிவாக முன்வைக்கிறார். மேலும், நம்முடைய எதிர்காலக் குடியரசில் எந்தவொரு குடிநபருக்கும் மௌனமும் மெத்தனமும் ஏன் ஒரு வாய்ப்பாக இராது என்பதையும் அவர் நமக்கு எடுத்துக்காட்டுகிறார். நம் கண்களுக்கு எதிராக வடிவமைக்கப்பட்ட புதிய இந்தியாவின் உண்மையான சித்திரத்தைக் காண உதவும் புத்தகம் இது. |