Description |
ஆகவே, எழுதுவதால் நான் மனிதனாக இருக்கவும், நான் மனிதனாக வாழவும் மனிதனாக வளரவும் முடிகிற காரணத்தால் எழுதுகிறேன். இப்பொழுது, கண்டவை, கேட்டவை, காண விரும்புபவை, கேட்க விரும்புபவை, பிறரின் சுகதுக்கங்கள், சந்தர்ப்பங்களின் விசித்திரங்கள், அகத்திலும் புறத்திலும் அவ்வப்போது கண்டறியும் உண்மைகள், பொய்கள் - இப்படி எல்லாவற்றையும் பற்றி நான் எழுதி ஒவ்வொரு எழுத்தையும் ஒரு குறிப்பிட்ட முடிவோடு முடிக்கும்போது என் மனித நிலையை உயர்த்தவும், அதன் மூலம் மற்றவர்களின் மனித நிலை உயரவும் அறிந்தோ அறியாத நிலையிலோ விரும்புகிறேன். எழுத்துப் பணியின் உச்ச நிலையில், நான் மற்ற சகல உயிர் வர்க்கங்களுடனும் ஒன்று கலந்து ஐக்கியமாகிவிடுவதால், நான் எனக்குச் செய்யும் மனித சேவை, மன்னுயிர் சேவையாகவும் இருக்கிறது. நான் உயர்ந்தால், உலகமும் உயர முடிகிறது. இப்படிப்பட்ட காரியத்தைக் கலைகளினாலேயே சாதிக்க முடியும். நான் பயின்ற கலை எழுத்து. அதனால் எழுதுகிறேன். |