Description |
ஸிந்தஸிஸ் எனும் செயற்கைப் பொருள் உற்பத்தி நிறுவனத்தின் உற்பத்திப் பொருள்களை உண்டு வாழும் மக்கள் பல்வேறான உடல் உபாதைகளை அனுபவிக்கிறார்கள். இந்தப் பொருட்களைக் கவர்ச்சியான மொழியில் மக்களிடம் கொண்டுசெல்லும் விளம்பர நிறுவனத்தில் கதையின் நாயகன் போருட் முக்கியப் பொறுப்பாற்றுகிறான். விளம்பரத்திற்காகத் தான் உருவாக்கிய வசீகர வாக்கியங்கள் மக்களுக்கு எவ்விதமான கேட்டை விளைவித்திருக்கிறது என்பதைக் காலம் கடந்து உணரும் போருட் தான் விளைவித்த கேட்டுக்குப் பரிகாரம் தேட முயலுகிறான். அவன் வெற்றியடைகிறானா, மாற்றங்கள் ஏற்படுகின்றனவா என்பதையே இந்த நாவல் விவரிக்கிறது. நாவலின் நாயகி மோனிக்கா தன் காதல் கணவன் போருட் தன்னைவிட்டு விலகிவிட்டான் என்று தெரியும் நாளில், அவனோடு தான் வாழ்ந்த வாழ்க்கை பொய்யின் மீது எழுப்பப்பட்டிருக்கும் மகிழ்ச்சி என்பதைப் புரிந்துகொள்கிறாள். தோல்வியுணர்வு பழிவாங்கும் உணர்வைக் கிளர்த்துகிறது. முன்பின் அறிந்திராத இளைஞனோடு படுக்கையைப் பகிர்ந்துகொள்ளத் தூண்டுகிறது. அவன்மீது ஏற்படும் பரிவு பின்னர் காதலாய் மாறுகிறது. என்றாலும் அவள் மனம் ஏங்குவதென்னவோ தன்னை விட்டுச் சென்றுவிட்ட போருட்டின் அண்மைக்குத்தான். தனிமனித உறவுகள் எப்படி நேர்ப்படுகின்றன, அவை ஏன் சீர்கெடுகின்றன என்பதைச் சுட்டும் விதத்தில் இந்த நாவலின் தனித்துவம் மிளிர்கிறது. |