Description |
சதுர்வருணம் என்பது சமுதாயத்தை நான்கு வகுப்பினர்களாகப் பிரிப்பதை மட்டுமே குறிப்பதாக இருப்பின் அது தீங்கற்ற, களங்கமற்ற கோட்பாடாக இருந்திருக்கும். ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த சதுர்வருணக் கோட்பாடு கொடிய நச்சை தன்னுள் கொண்டுள்ளது. இந்தக் கோட்பாடு சமுதாயத்தை நான்கு அமைப்புகளாகப் பிரிப்பதுடன் நிற்கவில்லை; அது மேலும் ஒருபடி மேலே சென்று, நான்கு வருணங்களுக்கிடையேயான கூட்டு வாழ்க்கையை நிர்ணையிப்பதற்கு வகை செய்யும் படித்தரநிலையில் அமைந்த ஓர் ஏற்றத் தாழ்வான கோட்பாடாகவும் உள்ளது. மேலும், படித்தர நிலையில் அமைந்த இந்த ஏற்றத்தாழ்வு ஏதோ வெறும் கோட்பாட்டளவில் அமைந்ததல்ல. மாறாக, அது சட்டப்பூர்வமானதாகவும், தண்டனைக் குரியதாகவும் அமைந்துள்ளது. சதுர்வருண அமைப்புமுறையின்படி சூத்திரன் இந்தப்படிநிலையின் கீழ்த்தட்டில் வைக்கப்படுவதுடன் எண்ணிறந்த இழிவுகளுக்கும் அவமதிப்புகளுக்கும் உள்ளாக்கப்படுகிறான். இதனால் சட்டம் அவனுக்கு நிர்ணயித்துள்ள படிநிலைக்கு மேல் அவன் உயர்ந்துவிடாதபடித் தடுக்கப்படுகிறான். உண்மையைக் கூறுவதானால் தீண்டப்படாதோர் எனும் ஐந்தாவது வருணம் உருவாகும் வரை சூத்திரன் இந்துக்களின் பார்வையில் தாழ்ந்தவனினும் தாழ்ந்தவளாக, இழித்தவனினும் இழிந்தவனாகக் கருதப்பட்டு வந்தான். சூத்திரர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினையின் தன்மையை இதிலிருந்து புரிந்துகொள்ளலாம். |