Description |
இந்திய மொழிகள் பலவற்றின் வரலாறுகளை வெளியிட சாகித்திய அகாதெமி கருதியிருப்பது மிகவும் வாய்ப்பானதொரு திட்டமெனவே நினைக்கிறேன். நமது நாட்டின் பெரு மொழிகளை ஆதரிப்பதும் அவற்றினிடையே நெருங்கிய உறவை விளைவிப்பதும் , அகாதெமியின் முக்கிய பணிகளுள் ஒன்று. பல்வேறு மொழிகளின் இலக்கியத்தை அந்தந்த மொழியிலேயே படித்தறிவது நம்முள் பலருக்கும் இயலாது. ஆயினும், இந்தியாவில் கற்றோர் எனக் கருதப்படுவோராவது தம் தாய்மொழி இலக்கியம் தவிர, பிற மொழிகளைப் பற்றியும் ஒரளவு அறிந்திருப்பது விரும்பத்தக்கதே. அத்தகையோர் அம்மொழிகளின் பழம் பெரும் காப்பியங்களோடும் புகழ் வாய்ந்த நூல்களோடும் பழக வேண்டும். விரிந்து பரந்து பன்முகமாய்க் கிடக்கும் பாரதப் பண்பாட்டில் ஊறித் திளைத்து அதைத் தமதுள்ளத்தோடு ஒன்றச் செய்தல் வேண்டும். இந்நிலை கைவரத் துணையாக, சாகித்திய அகாதெமி பாரத மொழி ஒவ்வொன்றிலுமுள்ள சிறந்த நூல்களை ஏனைய இந்திய மொழிகளில் வெளியிடுகிறது. இத்தகைய வரலாறுகளை ஆக்குவித்து வெளியிட்டும் வருகிறது. இவ்வாறு நமது பண்பாட்டுணர்வு ஆழ்ந்தகன்று பரவ, அகாதெமி துணைபுரிகிறது, இந்தியாவின் சிந்தனைப் போக்கு இலக்கியப் பாங்கு ஆகியவற்றின் சாரத்தில் காணும் ஒருமைப்பாட்டை மக்கள் உணரவும் உதவுகிறது. |