Description |
முதல் நாள் போரிலே இராமபிரானிடம் மூவுலகங்களையும் முக்கோடி வாழ்நாள் கட்டியாண்ட இராவணன் தோற்று, வெட்கி நிற்க, கோசலை நாடுடை வள்ளல், "இன்று போய், போர்க்கு நாளை வா!” எனக் கூறி அனுப்பினான். அதனால், வெட்கி, தலை குனிந்தவாறு, வீரத்தையும் களத்தே போட்டு விட்டு வெறுங்கையனாய், கால்நடையாய், சூரியன் மறையும் சமயத்தில் நகரமடைந்து, எதிரே வரும் எவரையும் பாராமல் அரண்மனையுள் சென்று ஆசனத்தில் அமர்ந்து, தனியாகச் சிந்தித்தான்: என் ஆட்சிக்குட்பட்ட எல்லா உலகங்களிலுள்ள அரக்கர்களையும் அழைத்து வாருங்கள் எனத்தன் தூதர்களுக்குக் கட்டளையிட அவர் களும் விரைந்து சென்றனர். போரில் தோற்ற வெட்கத்தினால், பெருமூச்சு விட்டுத் துக்கப்பட்டுக் கொண்டிருந்தான். |