Description |
பிலிப்பைன்ஸ் - ஆஸ்திரேலிய எழுத்தாளர் மெர்லிண்டா பாபிஸ் எழுதியிருக்கும் வெட்டுக்கிளிப் பெண் - ஓர் அன்புப் பாடல் என்னும் நாவல் கற்பனை வெளியில் உருக்கொள்கிறது. அசாத்தியமான புனைவு உருவகங்களின் வழியே சமகால அரசியலைத் தீவிரமாகப் பேசுகிறது. நாவலின் கதாபாத்திரங்களையும் சூழலையும் சமகால யதார்த்தத்துடன் புரிந்துகொள்ள முடிகிறது. பசிக்கு மக்கள் வெட்டுக்கிளிகளை உண்கிறார்கள். பார்லி கஞ்சியைக் குடிக்கிறார்கள். உணவிற்காகவும் நீருக்காகவும் உடல் பாகங்களையும் உடமைகளையும் விற்கிறார்கள். அதிகார வர்க்கத்தின் அதீதமான சுரண்டலால் இயற்கை பொய்த்துப்போகிறது. வானம் பழுப்பு நிறமாகிவிடுகிறது. மரங்களே இல்லாமல் போய்விடுகின்றன. எல்லைகள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன. இந்தச் சூழலில், எல்லையைக் கடக்க முற்படும் வெட்டுக்கிளிப் பெண்ணும் அவளின் அன்புப் பாடலும்தான் இவற்றுக்கான தீர்வாக அமைகிறார்கள். அரசாங்க அடக்குமுறைக்கும் எல்லைப் பிரிவினைவாதத்திற்கும் எதிரான குரல் நாவல் முழுவதும் எதிரொலிக்கிறது. உலக நாடுகளின் அரசியல் எப்படி இயங்குகிறது என்பதை மெர்லிண்டா பாபிஸ் அசாத்தியமான புனைவு மொழியில் பதிவுசெய்திருக்கிறார். வெடி விபத்தொன்றில் ஒன்பது வயதில் மண்ணுக்குள் புதைந்துபோகும் அமிதேயா, பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, நெற்றியில் உயிருடன் இருக்கும் வெட்டுக்கிளியோடு உயிர்த்தெழுகிறாள். எல்லையை நோக்கிய அவளுடைய பயணத்தில், உயிர் வாழ்வதற்கான அவள் தேடலில் அவளுடன் சேர்ந்து வாழ்க்கை குறித்த பல கேள்விகளுக்கு நமக்கும் பதில் கிடைக்கிறது. |