Description |
இந்தியாவின் அண்மை நாடு, தமிழ்நாட்டின் மிக அருகில் உள்ள நாடு இலங்கை. குமரிக் கண்டத்தில் ஒன்றாக இருந்த இலங்கை, கடற்கோள்களால் பிரிந்து தனி நாடாகிப்போனது. ஆனாலும் ஈழத் தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் காலம் காலமாக உறவு நீடித்து வருகிறது. குறிப்பாக யாழ்ப்பாணம் தமிழர் நிலமாகவே திகழ்ந்து கொண்டிருக்கிறது. முன்னொரு காலத்தில் இலங்கையை ஆண்டு கொண்டிருந்த அரசன் ஒருவன், யாழ் மீட்டுவதில் வல்லமைமிக்க தொண்டை நாட்டு பாணன் ஒருவனுக்கு, மணற்றி என்ற பகுதியைப் பரிசாகத் தந்தான். அந்தப் பகுதியே யாழ்ப்பாணம் என்றாகியது என்றொரு கதையும் உண்டு. இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளின் தலைநகரமாகவும் இருந்தது யாழ்ப்பாணம். வரலாற்றுக் கால இலங்கை, யாழ்ப்பாணத்தின் பழம்பெருமை, அங்கு நிகழ்ந்த இனக் கலவரங்களைப் பற்றி கவிக்கோ அப்துல் ரகுமான் 2003-ம் ஆண்டில் ஆனந்த விகடனில் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இலங்கையின் வரலாறு பற்றியும் தமிழருக்கும் சிங்களருக்கும் இடையே ஆதியிலிருந்து நடந்துவரும் மோதல்கள் பற்றியும் தமிழ் மக்கள் எவ்வாறெல்லாம் தாக்கப்பட்டார்கள், போராளிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நடந்த போர், சமாதானம் ஆகியன பற்றியும் பதிவு செய்திருக்கிறார் கவிக்கோ அப்துல் ரகுமான். ஈழத் தமிழர்களின் இன்னல் வாழ்வைப் பதிவு செய்துள்ள ஆவணம், இந்த நூல்! |