Description |
கவனம் என்பது ஐந்து புலன்களுக்கும் வழிகாட்டக் கூடிய மாபெரும் பொக்கிஷம். அதுவே அகக்கண் அல்லது மனக்கண் பார்வை. அந்த அகக்கண் சத்தியத்தையும், உண்மையையும், நியாயத்தையும், நிதானத்தையும் கொண்டு கவனத்தைப் பாதுகாக்கும். எந்தவொரு பொருளையும் கண்கள் பார்க்கும் பொழுது அல்லது எந்தவொரு பொருளும் கண்களைக் கவரும் பொழுது, அகக்கண் வழிகாட்டியாக இருந்து அவற்றின் தன்மைகளை சீர்தூக்கிப் பார்த்து அவற்றின் நிலையற்ற தன்மையை நமக்கு எச்சரிக்கை செய்யும். நல்லறிவு படைத்தோர் இத்தகைய கவனத்தை பாதுகாத்துக் கொண்டிருப்போரே ஆவர். உள்ளத்தில் கவனம் என்ன கூறுகின்றதோ, அதற்கு செவி சாய்ப்போராக இருப்பர். சத்தியத்தைக் கொண்டும், நீதியைக் கொண்டும் எச்சரிக்கை செய்யப்படும் பொழுது உள்ளச்சம் காரணமாகவே அந்த எச்சரிக்கைக்குப் பணிந்து சத்தியத்தின் பக்கமும், நியாயத்தின் பக்கமும் சார்ந்து நிற்பார்கள். அதாவது, உலகத்தின் Om சுகப்பொருள்கள் தன் மனதை கவர்ந்து விடாதவாறும், அதேசமயம் அதைவிட மோசமாக தன்னுடைய மனதை பொருள்களின் பால் இச்சை கொண்டு விடக் கூடிய அளவுக்கு பலவீனப்படுத்தியும் விட மாட்டார்கள். பொருள்களின் மீது மிகவும் எச்சரிக்கையோடு நாளைய வாழ்க்கைக்கு இவை உரியவை என்றும், இவற்றில் நிலையான வாழ்க்கை நமக்கு உண்டு என்றும் ஒருபோதும் கவனம் குறைந்து பொருள்களை மிகைப்படுத்திக் கொள்ளக் கூடிய வழிகளில் தங்களுடைய வாழ்க்கையை வீண் விரயம் செய்து விட மாட்டார்கள். இத்தகையோரே மனதின் போக்குகளிலிருந்தும், இச்சைகளிலிருந்தும் கவனத்தோடு தங்களைப் பாதுகாத்துக் கொண்டவர்கள். இவர்கள் நன்மையை ஏற்று, அதன் பொருட்டு தீமைகளை விலக்கிக் கொண்டவர்கள். |