Description |
பதினெட்டு சித்தர்களில் போகர் மிகவும் போற்றப்படுகிறார். பழனி என்றாலே அருள்மிகு தண்டாயுதபாணியின் நவபாஷண சிலையும் போகர் சமாதியும் நம் நினைவுக்கு வரும். சித்தர் போகர் துவாபர யுகத்திலிருந்தே இருந்து வந்துள்ளார் என்று போகர் அருள்பெற்ற எழுத்தாளர் திரு.சந்திரசேகர் தன் தெய்வீக ஆய்வுமூலம் நூல்களில் சுட்டிக்காட்டியுள்ளார். அதிசய சித்தர் போகர், போகர் ஏழாயிரம் என்பவை அவர் எழுதியவை. சில வருடங்களுக்கு முன் அவருக்கு ஒரு கனவு. அவர் சென்னையின் வடபழனி சாலை சந்திப்பில் நின்றிருக்க, அவர் அருகாமையில் திடீர் என்று தாமரை பூத்த ஒரு தடாகம் தென்படுகிறது. (அவ்விடத்தில் இன்று ஆப்பக்கடை, ஐஸ் கிரீம் மற்றும் மொபைல் கடைகள் உள்ளது). அங்கு இவருக்கு முன் சீனத்து தாடி மீசையுடன் தென் இந்திய முகச்சாயலோடு அரைதூக்க கண்களோடு ஒரு முதியவர் தென்படுகிறார். பொலிவான கருத்த நிறம் கட்டுமஸ்தான உடல், குறைந்த உயரம், வழுக்கை தலை, உதடுகள் பெரிதாகவும் இருக்கக்கண்டார். திரு.சந்திரசேகரை மிக அருகாமையில் உற்றுநோக்கிவிட்டு அவரது வலது உள்ளங்கையில் இருமுறை தடவிக் கொடுத்தார். அவர் எப்படி காட்சிக்கொடுத்தார் என்பதை ஆசிரியர் தன் நூலில் படமாக போடோஷாப்பில் முடிந்தவரை வரைந்துள்ளார். சித்தர் விதைத்த கரு சென்ற வருடம்தான் புத்தகங்களாக உருவானது. சித்தர் போகர் பற்றிய முழு ஆய்வு நூலாக முதலில் பதிப்பாளர்கள் வெளியிட்டனர். அதுதான் அதிசய சித்தர் போகர் (கற்பகம் புத்தகாலயம்). அதன்பின் மூன்றே மாதங்களில் போகர்-7000 (சப்தகாண்டம்) பாடல்களின் தொகுப்புக்கு விளக்கவுரை எழுதினர். இந்த சப்தகாண்டத்திற்கு இத்தனை நூற்றாண்டுகளாக யாரும் விளக்கவுரை எழுதவில்லை என்பது பதிப்பாளர்கள் வாயிலாக அறியப்படுகிறது. தான் தமிழில் பெரிய புலவனோ பண்டிதனோ ஆன்மிகத்தில் கரையேறியவனோ அல்ல என்று தன முன்னுரையில் ஆசிரியர் கூறியுள்ளார். போகரின் இன்னபிற பாடல்கள் இருக்க போகர்-7000 மட்டும் ஏன் தேர்வு செய்தார் என்று அவருக்கே தெரியவில்லை என்கிறார். போகரை தவிர இவருக்கு பல மகான்கள் நேரிலும் கனவிலும் வந்து அஷ்ட சித்திகளை (demonstrate) செய்து காண்பித்தார்கள் என்பது ஆச்சரியம்தான். ஸ்ரீராகவேந்திரர், ஷீரடி சாய்பாபா, பாம்பன் சுவாமிகள், காஞ்சி மகாபெரியவர், ஆகியோர்தான் அவர்கள். புத்தகத்தில் ஆசிரியர் எழுதவேண்டியவைகளை (inputs) இவர்கள் சுட்டிக்காட்டினார்கள் போலும். அருட்பெரும் சித்தம், அஷ்டமா சித்திகள், போகர், பழனியும் நவபாஷாண சிலையும்,போகர் அருளிய யந்த்ரம், சீன பயணம், காய கற்பங்கள், நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள், உலகம் சுற்றுதல், பிரளயம்/கலியுகம் எப்படி இருக்கும், ஜால வித்தைகள், போகர் பார்வையில் சதுரகிரி, காலங்கியின் உபதேசங்கள், மீண்டும் போகர் பிரவேசிப்பதையும் தன் முதல் நூலில் கூறியுள்ளார். |